துறைமுக வசதிகளை மேம்படுத்தி இலங்கை சர்வதேச நாடுகளுடன் போட்டி போட வேண்டும் : சாகல

இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொள்கலன் போக்குவரத்துக்கான இடைத்தரிப்பிட துறைமுக வசதிகளை வழங்குவதில் போட்டிப்போட்டுக்கொண்டு செயற்படுகின்றன.

இவ்வாறான வசதிகளை வழங்குவதில் இலங்கையின் துறைமுகம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அவற்றின் செயற்திறனை அதிகரிக்க வேண்டும் என்று துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

சர்வதேச சமுத்திரவியல் தினத்தை முன்னிட்டு இன்று மஹாபொல துறைமுகங்கள் மற்றும் சமுத்திரவியல் கற்கை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வாரம் சமுத்திரவியல் வாரமாக அறிவிக்கப்படுகிறது. இந்த உலக துறைமுக தினத்தை முன்னிட்டு கப்பல் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டியது விசேட தேவையாக மாறியுள்ளது.

ஆகவே பெண்களை கப்பல் துறைக்குள் இணைத்துக்கொள்வதில் விசேட கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு துறைமுகம் மற்றும் கப்பல் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது குறித்து இன்று சர்வதேசமும் முக்கிய அவதானம் செலுத்தியுள்ளது.

துறைமுக் மற்றும் கப்பல் துறைசார் தொழில்களில் பெண்களால் பங்குப்பற்ற முடியாது என்ற நிலைப்பாடே எமது சமுகத்தில் இருந்து வருகிறது. இலங்கை மாத்திரமல்ல சர்வதேசமும் இன்று அந்த நிலைபாட்டிலேயே இருந்து வருகிறது. இருப்பினும் எமது நாட்டில் இன்று துறைமுகம் மற்றும் கப்பல் துறை சார்ந்த தொழில்களில் அநேகமான பெண்கள் பங்குப்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!