முன் எப்போதையும்விட காந்தியை நினைவில் நிறுத்த வேண்டும் – மு. க. ஸ்டாலின்

தமிழகத்தில் முன் எப்போதையும் விட காந்தியையும், இந்தியா குறித்த அவரின் எண்ணத்தையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

“இந்த நாளில் என் சக இந்தியர்களோடு இணைந்து ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியை போற்றுகிறேன். அகிம்சை. இரக்கத்தை கற்பித்த அண்ணல் காந்தியடிகள் கருத்து வேறுபாடு, துன்ப துயரங்களின் போது மன உறுதியோடு அதனை எதிர்கொள்ளவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார். முன் எப்போதையும்விட அண்ணலையும், இந்தியா குறித்த அவரது எண்ணத்தையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும். என்றென்றும் வாய்மையே வெல்லட்டும்.” என அவர் பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். காலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மலர் தூவி மரியாதைசெலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!