துப்பாக்கிச் சூடு ஒரு தற்காப்புக்காவே நடத்தப்பட்டது: – அலட்சியமாக பதிலளித்த தமிழக முதல்வர்

தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த போது நான் ஆலோசனை கூட்டத்தில் இருந்ததாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதன் காரணமாக தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது துப்பாக்கிச் சூடு நடந்த போது நான் ஆலோசனை கூட்டத்தில் இருந்ததாகவும், நடந்தவை எல்லாம் ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரியும் எனவும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவரும் சில இயக்கத்தையும் சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியதால், இது போன்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இருக்கும் வாகனங்கள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன, அருகில் ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதியில் இருக்கும் வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு உள்ளே நுழைய முற்படுகின்றனர். இது போன்ற பதற்றமான சூழ்நிலை நிலவியதால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்த்தே தான் நான் தெரிந்துகொண்டேன், துப்பாக்கிச் சூடு ஒரு தற்காப்புக்காவே நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!