தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? – மாவட்ட ஆட்சியர் பதில்

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கமல், ஸ்டாலின் உட்பட பல முக்கிய பிரபலங்கள் இப்படி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த என். வெங்கடேஷ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்தீப் நந்தூரி நேற்று நியமிக்கப்பட்டார்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அவர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நிலையில், நிரூபர் ஒருவர் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த உத்தரவிட்டது யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அவர், இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனிடம்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்று சொல்ல முடியும், தற்போது கவனம் முழுவதும் மாவட்டத்தின் இயல்பு நிலையை மீட்பதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.மேலும் அத்தியாவசிய தேவைப் பொருட்களான பால் போன்றவைகள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!