வறுமையால் நேர்ந்த கொடுமை: 3 மகள்களுடன் வி‌ஷம் குடித்த தாய்- 2 சிறுமிகள் பலி

போடியில் வறுமையின் கொடுமை காரணமாக மகள்களுடன் தாய் வி‌ஷம் குடித்தார். இதில் 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் போடி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி லெட்சுமி (வயது 36). மகள்கள் அனுசுயா (19), ஐஸ்வர்யா (15), அட்சயா (10). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால்பாண்டி இறந்து விட்டார். இதனால் லெட்சுமி கூலி வேலைக்கு சென்று தனது மகள்களை வளர்த்து வந்தார்.

தற்போது மகள்களை படிக்க வைக்க பணம் போதவில்லை. மேலும் கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் பணம் சாப்பாட்டுக்கே தட்டுப்பாடாக இருந்தது. உறவினர்கள் இருந்த போதும் யாரும் உதவ முன் வரவில்லை. இதனால் வெறுப்படைந்த லெட்சுமி மற்றும் அவரது மகள்கள் உயிர் வாழ்வதை விட பால்பாண்டி சென்ற இடத்துக்கே சென்று விடலாம் என முடிவு செய்தனர்.

அதன்படி லெட்சுமி மற்றும் அவரது மகள்கள் வீட்டிலேயே வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களது முனங்கல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். 4 பேரையும் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் வழியிலேயே அனுசுயா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். லெட்சுமி மற்றும் மற்றொரு மகள் அட்சயா ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என பாரதியார் பாடிச் சென்ற தமிழகத்தில் வறுமையின் கொடுமை காரணமாக 4 பேர் வி‌ஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!