‘லலிதா ஜுவல்லரி நகைக்கடை வழக்கில்’.. ‘தேடப்பட்டு வந்த கொள்ளையன்’.. ‘போலீஸாரிடம் சிக்கினான்’.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடித்த வழக்கில் கொள்ளையன் ஒருவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூரில் வாகன சோதனையின்போது போலீஸாரிடம் சிக்கிய நபர் ஒருவரிடமிருந்து 5 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த நகைகளில் இருந்த பார் கோடுகளை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம் அவை லலிதா ஜுவல்லரி நகை என்பது உறுதியாகியுள்ளது.

கொள்ளை நடைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளில் இருவர் இருந்த நிலையில் வாகன சோதனையின்போது ஒருவர் சிக்கியுள்ளார். மற்றொரு நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் வாகன சோதனையின்போது தப்பி ஓடியவர்கள் யார் எனவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள நபரின் பெயர் மணிகண்டன் என்பதும், உடன் இருந்த நபரின் பெயர் சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள 5 கிலோ தங்கம் கொள்ளையடித்ததில் மணிகண்டனின் பங்கு என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!