சுதந்திர கட்சி கூட்டணி அமைக்குமாயின் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் மட்டுமேயாகும் : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணி அமைக்குமாயின் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் மட்டுமேயாகும். ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒருபோதும் கூட்டணிக்கு நாம் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர கூறுகின்றார்.

பொது சின்னத்தில் களமிறங்க இன்னமும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை முன்வைக்கையில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் பொதுவான சின்னத்தில் களமிறங்க முடியும். புதிய சின்னத்தில் களமிறங்க இன்னமும் வாய்ப்புக்கள் உள்ளது, அதேபோல் சின்னத்தை மாற்றுவதில் எந்தவித சட்ட சிக்கல்களும் இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்து கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அவ்வாறு இருக்கையில் நாம் அவர்களுடன் பொதுவான சின்னத்தில் பயணிப்பது குறித்து கேள்விகள் எழுகின்றது. ஆனால் கட்சியின் சின்னத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

அதற்கான அனுமதி இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு எமக்கு அறிவித்தது. நாம் சட்டத்தை ஆராய்ந்தே பேசுகின்றோம். எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன முன்னணியும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமாயின் பொதுவான சின்னத்தில் மட்டுமே களமிறங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!