ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிவான் உதேஸ் ரணதுங்க, ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்தார்.

சந்தியா எக்னெலிகொடவை துன்புறுத்தியமை மற்றும், அவரை அச்சுறுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு, 2016 ஜனவரி மாதம், ஹோமகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சந்தியா எக்னெலிகொடவை, நீதிமன்றத்துக்குள் வைத்து ஞானசார தேரர் அச்சுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் முடிவிலேயே நேற்று ஞானசார தேரர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்படவில்லை. எதிர்வரும் ஜூன் 14ஆம் நாள் தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதிவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஞானசார தேரரின் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டு, அவரைப் பிணையில் செல்வதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!