எஜமானரின் சொல்லை கேட்டு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் நாய்!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 53). மோட்டார் மெக்கானிக். இவருக்கு சொந்தமாக பம்புசெட் தோட்டமும் உள்ளது. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உவரிக்கு மெக்கானிக் வேலைக்கு சென்றபோது சாலையோரம் ஒரு நாய் குட்டி கிடப்பதை பார்த்தார். அதனை கண்டதும் பரிவு காட்டிய தனசேகரன், அந்த நாய்க்குட்டியை தனது வீட்டுக்கு எடுத்து வந்தார். அதற்கு கருப்பன் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகிறார். குட்டியாக இருந்தபோதே அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து, அதை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூறுவார். அதேபோல் அந்த நாய்க்குட்டியும் பிஸ்கட் பாக்கெட்டை வாயில் கவ்விச் சென்று வீட்டில் கொடுத்து வந்துள்ளது.

நாளடைவில் வீட்டுக்கு தேவையான பொருட்களை அவரது மனைவி ஆனந்தி ஒரு துண்டுச்சீட்டில் எழுதி சிறிய பிளாஸ்டிக் வாளியில் வைத்து, மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார். அதற்கு கருப்பனும் அதேபோல் கடைக்கு சென்று வாளியை வாயில் கவ்வியபடி பொருட்களை வாங்கி வந்துள்ளது. இப்போது எஜமானரின் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் முழுவதையும் கருப்பன் தான் வாங்கி வருகிறது. பொருட்கள் வாங்க தேவையான பணத்தையும் வாளியில் வைத்து அனுப்புகிறார்கள். அதையும் பத்திரமாக கொண்டு சென்று, மீதி பணத்தையும் வீட்டுக்கு கொண்டு வருகிறது.

தனசேகரன் தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் தனது தோட்டத்துக்கு செல்லும்போது கருப்பனையும் கூப்பிடுவார். சத்தம் கேட்டதும் வேகமாக ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் முன்னால் குதித்து ஏறிக் கொள்கிறது. அப்போது தன்னுடன் ஒரு சாக்குப்பையையும் மடக்கி வாயில் கவ்விக் செல்கிறது. அவர் அங்கிருந்து தேங்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை சாக்குப்பையில் போட்டு இதை வீட்டுக்கு சென்று கொடுத்து வா என்று சொல்லி அனுப்புகிறார். உடனே வாயில் கவ்வியபடி பொருட்களை எடுத்துச் சென்று வீட்டில் கொடுத்துவிட்டு காலி சாக்குப்பையுடன் மீண்டும் தோட்டத்திற்கு திரும்பி விடுகிறது. இந்த ருசிகர சம்பவம் தினசரி இங்கு நடைபெறுகிறது.

தனசேகரனுக்கு மதியழகன் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளனர். நாய் கருப்பனையும் சேர்த்து மூன்று பிள்ளைகளாக வளர்த்து வருவதாக தனசேகரன் தெரிவித்தார். எஜமானர் சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்து வரும் கருப்பனை அந்த ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!