ஆஸ்திரேலியாவில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு!

கெலின் வின்செஸ்டர் கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மேன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து 1999 முதல் 2008 வரை மேல்முறையீடு செய்தார். ஆனால் அனைத்து மேல்முறை யீடுகளையும் அந்நாட்டு கோர்ட்டு நிராகரித்தது. எனினும் நம்பிக்கையை விட்டுவிடாத டேவிட் ஈஸ்ட்மேன் 2014-ம் ஆண்டும் மீண்டும் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, டேவிட் ஈஸ்ட்மேனை குற்றவாளி என நிரூபிப்பதற்காக போலீசார் சமர்பித்த ஆதாரங்கள் மிகவும் குறைவானவை என்றும், இதனால் நீதி சிதைந்துவிட்டதாகவும் கூறி அவரை விடுவித்தார்.

இதையடுத்து, குற்றமே செய்யாமல் 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தற்காக டேவிட் ஈஸ்ட்மேன் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிராகரித்தது. இது தொடர்பாக டேவிட் ஈஸ்ட்மேன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை அடுத்து, நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சிறைவாசம் காரணமாக டேவிட் ஈஸ்ட்மேன் ஒரு குடும்பம் மற்றும் ஒரு தொழிலை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.34 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரம்) இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!