எரிவாயு சிலிண்டர் வெடித்து 13 பேர் சாவு – 2 மாடி வீடு இடிந்து தரைமட்டம்!

உத்தரபிரதேசத்தின் மாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட வாலித்பூர் பகுதியில் 2 மாடிகளை கொண்ட வீடு ஒன்று இருந்தது. இந்த வீட்டில் நேற்று காலையில் சமையல் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் தீப்பிடித்தது. மேலும் சிறிது நேரத்தில் அந்த வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தீக்காயங்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு மரண ஓலமெழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி வாரணாசியில் இருந்து விரைந்து வந்த தேசிய மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

எனினும் இந்த சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். அங்கு மேலும் 15 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. எனவே அவற்றில் தங்கியிருந்தவர்களை வீட்டில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்தையும் கேட்டுக்கொண்டு உள்ளார். கியாஸ் சிலிண்டர் வெடித்து 13 பேர் பலியான சம்பவம் மாவ் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!