சர்வதேச உணவு தினம்: 5 பைசாவுக்கு மணக்கும் சிக்கன் பிரியாணி!

உணவு குறித்தும், ஊட்டச்சத்து அத்தியாவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உறுப்பு நாடுகள் 1979-ம் ஆண்டு உணவு தினத்தை நிறுவி, அதனை வருடம்தோறும் கடைபிடிக்க வேண்டுமென ஐநாவுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்கு 1980ம் ஆண்டு ஐநா ஒப்புதல் அளித்தது. அதன்படி 1981 முதல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 82 கோடி மக்கள் பசியால் வாடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 9-ல் ஒருவர் பசியில் இருக்கிறார். மூன்று பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை அளிக்கிறது புள்ளிவிவரம். ஒருபுறம் உணவின்றி ஒருசாரார் தவித்துவரும் நிலையில் மறுபுறம் உணவு வீணாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

நகரமயமாதல் போன்ற காரணங்களால் விவசாயங்கள் அழிந்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவு என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது. குறைந்த காலங்களில் அதிக மகசூல் வேண்டி இயற்கைக்கு எதிராக உணவுபொருட்களை விளைவிப்பதும், உணவு விஷமாகும் ஆபத்துதான் எனவும் கூறப்படுகிறது. ஆரோக்கியமான உணவு என்பது அளவை பொறுத்தது இல்லை எனக்கூறும் மருத்துவர்கள், வயிறு முட்ட ஊட்டச்சத்து இல்லாத உணவை உண்பதைக் காட்டிலும், சீரான இடைவெளியில் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ளுதலே பயன் தரக்கூடியவை என்றும் அறிவுரை கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தின் அச்சாணியே உணவு. ஆனால் வயிற்றை நிரப்பி பசியை போக்க மட்டுமே உணவு என்ற நிலை வந்துவிட்டதாகவும், இதுவே ஊட்டச்சத்து குறைபாடான தலைமுறையை உருவாக்கி வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் என ஊட்டச்சத்து அதிகம் உள்ள இயற்கை உணவுகளை உட்கொள்ளுதல், துரித உணவுகளை தவிர்த்தல், நொறுக்குத் தீனிகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், முடிந்தவரை வீட்டில் சமைத்து உண்ணுதல் போன்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் ½ பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமானோர் கூடினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பிரியாணி வாங்க வரிசையில் காத்திருந்தனர். அதன் பின் 5 பைசா நாணயத்தை வாங்கி வைத்துக் கொண்டு 100 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து கடையின் உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் தெரிவிக்கையில், தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதே போல்தான் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம் என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!