எவரும் என்னிடம் கேள்வி எழுப்ப முடியாது!

தேர்தல் ஆணையாளர் என்ற வகையில் தாம் விடுக்கும் அறிவுறுத்தல்கள் குறித்து எவரும் தன்னைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படும் வேட்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரத்திற்கு யுத்த வெற்றியைப் பரப்புரை செய்வது தடைசெய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறு எந்தச் சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதென்பதை விளக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார். இதுபற்றிக் குறிப்பிட்ட ஆணைக்குழுவின் தலைவர்,

தேர்தல் சட்ட விதிகள் பற்றித் தம்மிடம் எவரும் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லையென்றும், அவற்றுக்குப் பதில் அளிப்பதைவிடுத்து, விதிகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

வேட்பாளர்கள் வேண்டுமானால், எனது அறிவுறுத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

யுத்த வெற்றி என்பது ஒரு மனிதனோ அல்லது ஓர் அரசியல் கட்சியோ சம்பந்தப்பட்டதல்ல முழு நாட்டு மக்களும் சம்பந்தப்பட்டது. எனவே அதனைத் தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்த முடியாது என்று ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

எனினும், இந்தக் கூற்றுக்குச் சவால் விடுக்கும் வகையில் பந்துல குணவர்தன எம்.பி. கேள்வியெழுப்பியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!