மாணவர்களை போல நடத்துங்க.. அட்டை பெட்டியால் மூடிவிட்டு எக்ஸாம்… பிரபல கல்லூரியில் நடந்த அதிர்ச்சி!!!

பிரபல கல்லூரியில் மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டியை வைத்து மூடிவிட்டு பரீட்சை எழுத சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தேர்வு முறைகேடுகளை தவிர்க்க சி.சி.டி.வி மற்றும் தேர்வர்கள் மூலம் கண்காணிப்பது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் கர்நாடக மாநிலம் ஹவேரியில் உள்ள பிரபல கல்லூரியான பகத் பி.யூ கல்லூரியில் அதன் நிர்வாகி எடுத்த நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நேற்று முன்தினம் அந்த கல்லுரியில் தேர்வு தொடங்கியது. அப்போது மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், அருகில் உள்ளவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும், தேர்வு எழுதிய அனைவரின் தலையில் அட்டைப்பெட்டியை ஹெல்மெட் போல் அணிவித்து உள்ளனர். வினாத்தாளை பார்த்து விடைத்தாளில் எழுதுவதற்கு மட்டும் அட்டைப்பெட்டியில் இரு துளைகள் போடப்பட்டு இருந்தன. அதன் வழியாக மாணவர்கள் வினாத்தாளை பார்த்து, விடைத்தாளில் எழுதினர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது வெற்றி பெற்றால், இந்த முறையை அனைத்து தேர்வுகளிலும் அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது.இதன் மூலம் மாணவர்கள் வினா மற்றும் விடைத் தாளை மட்டுமே பார்க்க முடியும் என்று வேறு முறைகேடுகளில் கவனத்தை திருப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நூதன முறையில் நடைபெற்ற இந்த தேர்வு முறையை யாரோ புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாணவர்கள் ஒன்றும் விலங்கு அல்ல, அவர்களை மனிதர்கள் போல நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக கல்வி அமைச்சர், இது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!