தீவிரமடையும் பருவமழை: தமிழகத்தில் நாளை “ரெட் அலெர்ட்” எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும் போது, தென் தமிழகம் மற்றும் குமரி கடலையொட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான வடதமிழகம், தெற்கு ஆந்திராவையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல்,அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், அடுத்த 2 தினங்களுக்குதமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வட தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், தி.மலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கூறி உள்ளார்.

இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் தமிழகம், கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை அதி தீவிர கனமழை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நாளை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!