கனேடிய நாடாளுமன்ற தேர்தல் – பெரும் வெற்றியை நோக்கி ஹரி ஆனந்தசங்கரி

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 63 வீத வாக்குகளுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக ரொறன்ரோ ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்டிருந்தார்.

196 தேர்தல் அறிக்கைகளில், 172 அறிக்கைகள் வெளியான நிலையில் ஹரி ஆனந்தசங்கரி தெளிவான பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு 63 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சியின் பொப்பி சிங் 19 வீத வாக்குகளையே பெற்றுள்ளார். புதிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 11 வீதமும், கிறீன் கட்சி வேட்பாளருக்கு 4 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

கடந்த முறை ஹரிஆனந்தசங்கரி இதே தொகுதியில் 60 வீத வாக்குகளையும், கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் 27 வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

அதேவேளை, கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை இழக்கின்ற போதும், அதிகளவு ஆசனங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!