சசிகலாவின் தண்டைனை காலம் முடியும் வரை சிறையில் தான்…!

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிற்கு நன்னடத்தை கைதிகள் விடுதலை பொருந்தாது எனவும் அவர் தண்டனை காலம் முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி மெஹரிக் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்ட இவர்களுக்கு 2020ம் ஆண்டு இறுதியில் தான் தண்டனை காலம் முடிவடைகிறது.

இந்நிலையில், சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கையில் அவரது தரப்பு ஈடுபட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதற்காக மத்திய மாநில அரசுகளின் உதவியை நாடியதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக வெகுவிரைவில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

ஆனால் இதில் திடீர் திருப்பமாக சசிகலா முழு தண்டனை காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என கர்நாட்க சிறைத்துறை கூடுதல் டிஜிபி மெஹரிக் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கர்நாடக சிறைத்துறை விதிகள்படி கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்பாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதற்கும் சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சசிகலா தண்டனை பெற்றுள்ள வழக்கிற்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது. இதனால் அவர் தண்டனை காலம் முழுவதையும் சிறையில் அனுபவித்த பிறகே விடுதலையாக முடியும் என கூறியுள்ளார்.

சசிகலா விரைவில் விடுதலையாவார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் டிஜிபியின் பேட்டி அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!