முரண்பாடான சாட்சியம் – தெரிவுக்குழுவை தவறாக வழிநடத்த முயன்ற சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, இரண்டு விடயங்களில் முரண்பாடான கூற்றுக்களை முன்வைத்து- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவை “வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியுள்ளார்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்த போது, சிங்கப்பூரில் தங்கியிருந்த சிறிலங்கா அதிபர், அனைத்து விமானங்களின் ஆசனங்களும் நிரம்பியிருந்ததால், தன்னால் அன்றே உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை என்று, ஒரு மூடிய சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். தாக்குதல் நடந்த அடுத்தநாளே அவர் கொழும்பு திரும்பியிருந்தார்.

எனினும், சிறிலங்கன் எயர்லைன்ஸில் இருந்து பெறப்பட்ட பதிவுகள், ஏப்ரல் 21 அன்று சிங்கப்பூர் – கொழும்பு இடையே இயங்கும் மூன்று விமானங்களில் ஆசனங்கள் இருந்தன என்பதைக் காட்டுகின்றன.

சிங்கப்பூர் அரசாங்கம் ஒரு சிறப்பு விமானத்தை ஒழுங்கு செய்து தர முன்வந்ததாகவும், தான் முன்பதிவு செய்த விமானம் கொழும்பை வந்தடையும் சம நேரத்தில் தான் அந்த விமானம் மூலமும் வந்தடையலாம் என்பதால், அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும், அதிபர் சிறிசேன தெரிவுக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.

தாக்குதல்களுக்குப் பின்னர், திட்டமிடப்பட்ட விமானம் மூலமாகவோ, அல்லது ஒரு சிறப்பு விமானத்தின் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோ, உடனடியாக நாடு திரும்புவதற்கு சிறிலங்கா அதிபர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும் என்றும், தெரிவுக்குழு கூறியுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் ஏப்ரல் 11ஆம் நாளே தாக்குதல் குறித்த தகவலைப் பெற்றிருந்தார் என்ற ஊடகத் தகவல்களுக்கு முரணாக, தமக்கு இதுபற்றி முன்னரே தெரிந்திருக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியதாகவும் தெரிவுக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!