ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் – புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை போல வரும் நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் ஹோன்சு தீவில் உள்ள ஹிரோஷிமா நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. ஆனால் ஜப்பான் புவியியல் ஆய்வுமையம் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் போது, வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உறக்கத்தில் இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஹிரோஷிமா நகரில் சில கட்டிடங்களும், சாலைகளும் சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் காரணமாக 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஹிரோஷிமா நகரில் வரும் நாட்களில் இதே போன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜப்பான் புவியியல் ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!