கோத்தாவைக் கொல்ல வேண்டும் என கூறினாரா பௌசி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை கொல்ல வேண்டும் என்று தான் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொட்டலங்க பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கோத்தபாயவை தோற்கடிக்க வேண்டும் என்ற தனது உரையை திரிபுபடுத்தி, மக்களைத் தவறாக வழிநடத்தும் விதமாக ‘கோத்தபாயவை கொல்ல வேண்டும்’ என்று கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு செய்தி வெளியிட்ட சிங்கள தொலைக்காட்சி ஊடகத்தின் மீது சட்டநடவடிக்கை எடுக்கவிருக்கின்றேன். நான் அரசியல் பயணத்தை ஆரம்பித்து 59 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இதுவரை கால அரசியல் வாழ்வில் நான் யார் மீதும் மோசமான அவதூறுகளைக் கூறியதில்லை. அதேபோன்று தேவையற்ற சேறுபூசும் கருத்துக்களை முன்வைத்ததும் இல்லை.

கோத்தபாய ராஜபக்க்ஷ எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய குடும்பத்துடனும் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!