நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துங்கள்..!

தாம் அதிகாரத்துக்கு வந்தால் தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்வாறான அணுகுமுறை முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் தெளிவான கொள்கையை வெளிப்படுத்தவேண்டும். வேட்பாளர்கள் ஒளிவு மறைவு இன்றி தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டியது அவசியமாகும். நாட்டில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்பதனை முதலில் பிரதான வேட்பாளர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன் அதற்கான தீர்வுத்திட்ட அணுகுமுறையை தெளிவாக வெளியிடவேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கின்றன. நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் சூறாவளிப் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன.

பிரதான வேட்பாளர்களாக நாட்டின் 8ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ஷ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரசாரக்கூட்டங்களில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

8ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். தேர்தலைப் பொறுத்தவரையில் சுமார் 1கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச, அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியை பிரதானமாக கொண்ட தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரையாற்றி வருகின்றனர்.

அதாவது தாம் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் என்ன செய்வோம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கக்கூடிய இறுதி தீர்மானம் எடுப்பவர்களாக வாக்காளர்களே இருக்கின்றனர். எனவே வாக்காளர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் மற்றும் வேட்பாளர்கள் வெளிப்படுத்தவேண்டிய விடயங்கள் என்பன முக்கியத்துவமிக்கதாகவுள்ளன.

தேர்தல் என்பது ஒருநாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மிக முக்கியமான அம்சம். அந்த ஜனநாயக கோட்பாடுகள் சரியான முறையில் இயங்குவதற்குத் தேர்தல்கள் உரிய நேரத்தில் நீதியாகவும் நியாயமாகவும் நடத்தப்படவேண்டும். அந்த தேர்தல்களின் ஊடாகவே மக்கள் தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். அதாவது பொதுமக்கள் தாம் விரும்பிய தலைவரை தேர்தல்கள் ஊடாக தெரிவுசெய்கின்றனர். எனவே அவ்வாறு பொதுமக்கள் தாம் விரும்பிய தலைவர்களை, அடுத்த ஐந்து வருடங்களுக்கு தம்மை ஆட்சி செய்யப்போகும் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான உரிமை தேர்தல் ஊடாகவே கிடைக்கிறது.

எனவே பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாக்களிக்காமல் இருந்துவிடுவது தமது உரிமையை வாக்காளர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஒப்பானதாகும். எனவே பொதுமக்கள் தமது கையில் கிடைத்திருக்கின்ற இந்த ஜனநாயக ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும். எனினும் தேர்தல் ஒன்றில் வாக்காளர்கள் எவ்வாறு தீர்மானம் எடுக்கப்போகின்றார்கள் என்பதும் யாருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள் என்பதை தீர்மானிப்பதும் மிகவும் முக்கியத்துவமிக்கவையே.

வாக்காளர்களைப் பொறுத்த வரையில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஒரு சரியான முடிவை எடுத்து அவர்கள் தமது தலைவரைத் தெரிவு செய்வார்கள். அவ்வாறு தெரிவு செய்வதற்காக வாக்காளர்கள் தீர்மானம் எடுக்கும்போது அது தொடர்பில் செல்வாக்கு செலுத்துகின்ற பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அவை நிறைவேற்றப்பட்ட விதங்கள் மற்றும் இந்தத்தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான யோசனைகள், மற்றும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார வேலைத்திட்டங்கள் என்பன வாக்காளர்கள் தீர்மானம் எடுப்பதில் செல்வாக்கு செலுத்தும் மிக முக்கியமான காரணிகளாக காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை, 1977ஆம் ஆண்டுக்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பானது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. எனினும் முதலாவது ஜனாதிபதி தேர்தலானது 1982ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன வெற்றிபெற்றார். அதேபோன்று 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றிபெற்றார். மேலும் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க வெற்றியீட்டியிருந்தார். 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவரே வெற்றிபெற்றார். 2005ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றதுடன் 2010 ஆம் ஆண்டிலும் அவரே இரண்டாவது தடவையாக வெற்றிபெற்றார்.

இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதி பதவியானது மிகப்பலமானதாகவும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக கொண்டதுமாக அமைந்திருந்தது. குறிப்பாக பாராளுமன்றத்தை ஒருவருடத்தில் கலைக்கும் அதிகாரம் பிரதமரை, அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம், நீதித்துறை சார்ந்த நியமனங்கள், ஆளுநர் நியமனங்கள் உள்ளிட்ட பல அதிகாரங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்பட்டன. மிக முக்கியமாக ஜனாதிபதியின் எந்த வொரு செயற்பாட்டிற்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.

எனினும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பல அதிகாரங்களை நீக்கினார். குறிப்பாக பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைப்பதற்கு காணப்பட்ட அதிகாரம் நீக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே கலைக்க முடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமன்றி அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையுடனேயே நியமிக்கவேண்டும் என்ற யோசனையும் நிறைவேற்றப்பட்டது. முக்கிய அரச நியமனங்கள் அரசியலமைப்பு பேரவையினால் தீர்மானிக்கப்படும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

சுயாதீன ஆணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்ற ஏற்பாடும் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் பார்க்கும்போது அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது அதிகாரம் குறைந்தவொரு பதவியாகவே காணப்படுகின்றது. எனினும் நிறைவேற்று அதிகாரம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. அதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி என்பது இன்னும் ஒரு முக்கியத்துவமிக்க பதவியாகவே காணப்படுகின்றது.

விசேடமாக நாட்டின் நீண்டகாலமாக புரையோடிப்போய் காணப்படுகின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீரவு காணும் விடயத்தில் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் வகிபாகம் மிகவும் முக்கியமானது. தற்போது கூட நாட்டில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமை இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வைத்தே பார்க்கப்படுகின்றது. அனைத்து மாகாண சபைகளுக்கும் ஜனாதிபதியே தனது பிரதிநிதியாக ஆளுநர்களை நியமிக்கின்றார். எனவே தமிழ்ப் பேசும் மக்களை பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் முக்கியமானது என்பதனை மறுப்பதற்கில்லை.

இந்த நிலையில் வாக்காளர் களைப் பொறுத்தவரையில் மிகவும் நிதானமாக சிந்தித்து தமது தெரிவை எடுக்கவேண்டியது அவசியம். இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் தீர்க்கமான நிலைமையில் நடைபெறுகின்றது. தமிழ்ப் பேசும் மக்கள் பல்வேறு விடயங்களை அடிப்படையாகக்கொண்டே தேர்தலில் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மிக முக்கியமாக பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் தமது நிலைப்பாடுகளை அறிவிப்பது அவசியமாகிறது.

பிரதான வேட்பாளர்கள் முன்வைக்கின்ற முக்கிய விடயங்களை கவனத்திற்கொண்டே வாக்காளர்கள் தமது தெரிவை செய்வார்கள். அதற்கு பிரதான வேட்பாளர்கள் முக்கிய தேசிய பிரச்சினை விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்பதனைத் தெளிவாக குறிப்பிடவேண்டும். அதாவது தான் அதிகாரத்துக்கு வந்தால் தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்வாறான அணுகுமுறை முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் தெளிவான கொள்கையை

வெளிப்படுத்தவேண்டும்.

இங்கு வேட்பாளர்கள் ஒளிவு மறைவு இன்றி தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டியது அவசியம். அதாவது நாட்டில் தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்பதனை முதலில் பிரதான மூன்று வேட்பாளர்களும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன் அதற்கான தீர்வுத்திட்ட அணுகுமுறையை தெளிவாக வெளியிட வேண்டும்.

முக்கியமாக எவ்வாறான அணுகு முறையில் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் அடையப்படும் என்பது வெளிப்படுத்தப்படவேண்டியது கட்டாயம். அதாவது இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் தமக்கான ஓர் அரசியல் தீர்வுக்காக சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே போராடிவருகின்றனர். கடந்த காலங்களில் போராட்டங்கள் பல வடிவங்களைப் பெற்றபோதிலும் நோக்கம் நியாயமான ஒரு அரசியல் தீர்வை பெறுவதாகவே இருந்தது. எனினும் கடந்த 70 வருடங்களாகவே தமிழ்ப் பேசும் மக்களினால் ஒரு அரசியல் தீர்வைப்பெற முடியாத நிலைமையே நீடித்துவருகின்றது.

கடந்த 70 வருடங்களாக அரசாங்கங் களை அமைத்த ஆட்சியாளர்களினால் இதுவரை இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாத சூழலே நிலவி வருகின்றது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரும்போது தேசிய பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதியை வழங்கியே வந்துள்ளனர். ஆனால் இறுதியில் தீர்வுகாண முடியாமல் போன வரலாறு களே உள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது.

காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டு பிரதான தேசிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. இதனூடாக பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக குழுக்களும் நியமிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் வீணாகிப்போயின. அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த சந்தர்ப்பத்தில் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்தது. இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு அனைவரும் ஆதரவு வழங்கக்கூடிய நியாயமான தீர்வுத்திட்டத்தை அடைய முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்தது. ஆனால் கூட்டமைப்பின் அந்த முயற்சியும் வீணாகிப்போனது என்றே கூறவேண்டும்.

இவ்வாறான தீர்க்கமான கட்டத்தி லேயே இம்முறை நாட்டின் அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அடுத்தமாதம் 16 ஆம் திகதி நடைபெறுகின்றது. எனவே இதில் பிரதான வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இடையிலான பிணைப்பு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது முக்கியமானது.

அதாவது மிக முக்கியமாக இந்த நாட்டின் தமிழ்ப்பேசும் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகின்றனர் என்பது தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்கின்றனர். நாட்டின் தமிழ்ப்பேசும் மக்களின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவதாகவும் எதிர்வுகூறப்படுகின்றது. எனவே தமிழ்ப் பேசும் மக்கள் தமது தீர்மானத்தைத் தெளிவாக எடுக்கவேண்டும்.

தற்போது பல்கலை மாணவர்களின் முயற்சியில் ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13 அம்ச வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளன. அவைதொடர்பில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும். இதில் தமது நிலைப்பாடுகளை வேட்பாளர்கள் தெளிவாகக் கூறிவிடவேண்டியது அவசியமாகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தான் இந்த 13 அம்ச திட்டத்தை நிராகரிப்பதாகவும் அதனை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேசவும் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும்.இந்தத் திட்டத்தை ஏற்காவிடின் தான் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண்பேன் என்பது குறித்து அவர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். குறைந்தபட்சம் தேர்தல் விஞ்ஞாபனத்திலாவது மக்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். நாட்டில் தேசிய பிரச்சினை ஒன்று இல்லை என்றும் அரசியல் தீர்வு முக்கியத்துவமற்றது என்ற வகையிலுமான நிலைப்பாட்டில் வேட்பாளர்கள் செயற்படுவது யதார்த்தமாகாது.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் அனைத்து வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருவது அவசியம். அதாவது எந்தவொரு வேட்பாளரும் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீரவுகாண வேண்டும் என்ற விடயத்தை நிராகரிக்க முடியாது. அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே எவ்வாறு தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்பது குறித்த தெளிவான அணுகுமுறையைப் பிரதான வேட்பாளர்கள் வெளிப்படுத்த வேண்டும். அதனூடாகவே வாக்காளர்கள் தமது முடிவை எடுக்கவுள்ளனர்.

இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் தீர்க்கமான கட்டத்தில் நடைபெறுகின்றது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படப் போகின்றவருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. குறிப்பாக தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதியின் வகிபாகம் முக்கியமானது. அதனால் வாக்காளர்கள் மிகவும் தெளிவாக தமது தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்பதுடன் வேட்பாளர்கள் பிரச்சினைத் தீர்வு குறித்த அணுகுமுறை தொடர்பான நிலைப்பாட்டை த் தெளிவாக அறிவிக்கவேண்டும் என்பதே முக்கியம்.

– ரொபட் அன்டனி –

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!