உயிர்ப்பலி ஏற்பட்டால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? – அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை ஐகோர்ட்டில் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும்போது அவர்களை காப்பாற்ற 6 விதமான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ளன.

இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரத்திலேயே உயிருடன் குழந்தையை மீட்டுவிடலாம். ஆனால் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி சம்பவத்தில் இந்த தொழில் நுட்பத்தில் ஒன்றை கூட பயன்படுத்தவில்லை.

காலதாமதம் ஏற்பட்டதால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோய் விட்டது. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2010-ம் ஆண்டே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின்படி ஆழ்துளை கிணறுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தமிழக அரசு 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், தமிழக அரசின் சட்டத்தையும் அரசு அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

எனவே, இது சம்பந்தமாக தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், சே‌ஷசாய் ஆகியோர் அவசர வழக்காக இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

அப்போது தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் சட்டத்தையும், சுஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும் சிறிது காலம் அமல்படுத்திவிட்டு அதன்பின்பு கைவிட்டு விடுகின்றனர்.

சட்டத்தை முறைப்படி அமல்படுத்தினால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாது.

இவ்வாறு நீதிபதிகள் அரசு தரப்பு வக்கீலிடம் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!