தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை ; எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தென்மராட்சியின் தொகுதிகளை மற்றும் வட்டாரக் கிளையினருடனான சந்திப்பு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே கூறிவிட்டார் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று. சஜித் பிரேமதாசவுடன் நாம் எமது நிலைப்பாடுகள் தொடர்பில் பேசலாம். எமது இனத்தையே அழித்தவர்கள் ராஜபக்ஷாக்கள் தான்.

ஆகவே நாம் நிதானமாகச் செயற்படவேண்டும். சிலவேளைகளில் நாம் வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கின்ற வேட்பாளர் எமது அறிவிப்பால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் நிலைமை உள்ளது. இந்த இடத்தில் நாம் நிதானத்துடனும் பொறுமையுடனும் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும். தென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோத்தா உள்ளார். எமது வாக்குகள் பொன்னானவை. தமிழர்கள் என்றில்லாமல் சிறுபான்மையின தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒருவரைத் தெரிவு செய்தால்தான் எமது குறிக்கோளை நாம் அடையலாம்.

பல்கலைக்கழக மாணவர்கள் 6 கட்சிகளை ஒன்றிணைத்தனர். அதில் ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கும்படி கூறிவிட்டு விலகிவிட்டது. மற்றைய கட்சி ஊடகங்களில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது நாம் எந்த வேட்பாளரையும் சுட்டிக்காட்ட முடியாது என்று. அந்தக் கட்சி ஒரு பதியப்படாத கட்சி. அவர்களின் கருத்தைப் பார்த்தால் 35 வேட்பாளருக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தப்படட்டும் என்பதாகும்.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மைத்தான் தெரிவு செய்துள்ளார்கள். வடக்கு கிழக்கில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் எமது கட்சியைச் சார்ந்தவர்கள் 16 பேர். மக்கள் எம்மைத் தெரிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை. நாம் எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும்.

மைத்திரியை நாம் கொண்டுவந்து எதுவும் நடைபெறவில்லை என்கின்றார்கள். அது முழுக்க முழுக்கப் பொய்எதுவும் நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஏராளமான அபிவிருத்திகள் நடைபெற்றன பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஏன் பாராளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு புதிய அரசமைப்பு நகல் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு பல செயற்பாடுகள் நடைபெற்றன எனவே குறித்த விடையங்களை தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை நாம் சிந்தித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!