கனடாவில் இருந்த வந்த கஞ்சா பார்சல்- கம்பி எண்ணிய பொறியியலாளர்!

கனடாவிலிருந்து 60 கிராம் கஞ்சாவை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து மயூரன் என்ற பொறியியலாளர், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையில் எதிரியின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில்,

கணனி பொறியியளாளரான சிவத்தம்பி மயூரன் சிங்கப்பூரில் கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்புகையில் பயணப் பொதிகள் இரண்டை தபால் மூலமாக கொழும்பு விலாசத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு நாடு திரும்பி உயர் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல ஆயத்தமாகையில் கொழும்புத் தபால் தலைமையகத்திலிருந்து பார்சல் வந்திருப்பதாகவும் அதனை பெற்றுக் கொள்ளும்படியும் அறிவித்தல் கிடைத்ததையடுத்து தான் சிங்கப்பூரிலிருந்து அனுப்பிய பார்சல்களை பெறுவதற்காக கொழும்புத் தபால் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் இவரது பெயரிற்கு கனடாவிலிருந்து வந்த பார்சலை சுங்க தினைக்கள அதிகாரி குமாரப்பேலி பிரித்துப் பார்க்கும் பொழுது, அந்த பார்சலில் கஞ்சா காணப்பட்டதையடுத்து சுங்க தினைக்கள அதிகாரி இந்தப் பார்சல் உம்முடையதா என்று எனது கட்சிக்காரரிடம் கேட்டபொழுது அது தான் அனுப்பிய பார்சல் இல்லையெனவும் தான் சிங்கப்பூரில் அனுப்பிய பார்சலை பெற வந்ததாக சாட்சியத்தில் கூறியுள்ளார்.

சுங்க தினைக்கள அதிகாரி மேலதிக விசாரணைக்காக கனடாவிலிருந்து வந்த பார்சலையும் மயூரனையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு பாரம் கொடுத்தபின்னர் உண்மைத் தன்மையை கண்டறிய எந்த வித விசாரணையும் நடத்தாமல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டு ஒன்பது நாட்களில் பிணை வழங்கப்பட்ட பின்னர் தான் சிங்கப்பூரிலிருந்து அனுப்பிய பார்சல் மத்திய கொழும்பு தபால் நிலையத்திற்கு வந்திருப்பதாக அறிவித்தல் கிடைத்ததையடுத்து அந்தப் பார்சல்களை மத்திய கொழும்பு தபால் நிலையத்திற்குசென்று பெற்றுள்ளார்.

தனது பெயருக்கு முதலில் வந்த பார்சல் தான் சிங்கப்பூரிலிருந்து அனுப்பிய பார்சல் என கருதியே பார்சலை பெறுவதற்காக மத்திய கொழும்பு தபால் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்த மாணவனின் வளர்ச்சியையும் திறமையினையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் மயூரனின் பெயரையும் வீட்டு விலாசத்தையும் குறிப்பிட்டு கஞ்சாவை பார்சல் செய்து கனடாவிலிருந்து அனுப்பியுள்ளனர்.

கனடாவிலிருந்து வியாபாரம் செய்வதற்காக கஞ்சா கடத்தப்பட்டதாக எதிரிமீது பொலிசாரினால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் கனடாவிலிருந்து வந்த பர்சலில் 60 கிராம் கஞ்சாவே காணப்பட்டது. யாராவது வியாபாரம் செய்வதற்கு கனடாவிலிருந்து 60 கிராம் கஞ்சாவை பார்சலில் அனுப்புவார்களா உள்நாட்டிலில்லாத கஞ்சாவா? இந்த விடயங்களை விசாரணை செய்யாமல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்ட மாணவன் மயூரனுக்கு ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் எவருக்கும் ஏற்படலாம் இந்த வழக்கை விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற செயல்பாட்டினால் ஒரு நிரபராதியின் எதிர் காலமே கேள்விக்குறியாகியுள்ளமையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என தனது வாதத்தை சட்டத்தரணி தவராசா முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து, தனது தீர்ப்பில் மயூரனை முற்றுமுழுதாக வழக்கிலிருந்து விடுதலை செய்ததடன் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி விசாரணையை நடத்தாமல் தவறான குற்றச்சாட்டை சுமத்தி பொய்யான வழக்கை தாக்கல் செய்ததனால் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சிவத்தம்பி, மயூரன் ஒன்பது நாட்கள் வெலிகட சிறையில் அடைத்து வைக்கப்பட்டமையால் அவருக்கு ஏற்பட்ட உடல் மன ரீதியான பாதிப்பிற்காக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி ஏன் நஸ்ட ஈடு வழங்கக் கூடாது என்பதற்கு காரணங்கள் காட்டப்படுவதற்காக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு மார்கழி மாதம் 6ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளையிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!