கொழும்பு துறைமுக நகரை நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்றதால் உள்ளூர் சர்வதேச விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி – சம்பிக்க ரனவக்க

கொழும்பு துறைமுக நகரத்தின் உரிமையை நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்றதை அடுத்து இந்த நகரம் தொடர்பாக உள்நாட்டுச் சர்வதேச விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலிசம்பிக்க ரனவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல – சுஹூருபாயவில் அமைந்துள்ள பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த துறைமுக நகரம் முழுவதும் நகர அபிவிருத்தி சபைக்கு உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்பந்தத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நகரத் திட்டம் தொடர்பில் 2000 ஆம் ஆண்டுகளிலே திட்டமிடப்பட்டது. இதன்போது ரணில் விக்கிரம சிங்கவே பிரதமராக செயற்பட்டார். செஸ்மா என்ற நிறுவனத்தின் திடத்தின் ஊடாகவே இந்த துறைமுக நகரத் திட்டம் தோற்றம் பெற்றது.

அதற்கமைய 2014 ஆம் ஆண்டின் போது இந்த திட்டம் கைச்சாத்திடப்பட்ட போதும், அரசாங்கத்தின் மாற்றம் காரணமாக இதனைச் செயற்படுத்த முடியாமல் போனது. இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் , சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துடன் (சி.சி.சி) இணைந்து 1.4 பில்லியன் டொலர் செலவிட்டு இந்த நகரத் திட்டத்தை அமைக்கத் தீர்மானித்தது.

இந்த திட்டத்தை ஆரம்பித்தவுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சனங்களைப் பெரிதும் எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாட்டின் ஒரு பகுதி வேறொரு நாட்டிற்கு உரித்தாகிவிடும் எனவும் , ஒரு நாட்டுக்குள் இரு நாடுகளின் ஆட்சி ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த நகரத் திட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் போது பாரியைச் சூழல் மாசடையும் என்றும். இதன் விளைவாக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வதேச நாடுகளும் இந்த துறைமுக செயற்திட்டம் தொடர்பில் அச்சமடைந்தன . மீண்டும் யுத்தம் செய்வதற்காகவா துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது எனப் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த துறைமுக நகரத்தில் கார் பந்தயங்களையும் , கெசினோ நிலையங்களையும் , விபச்சார விடுதிகளையும் நடத்தவே இந்த நகரத்தை அமைக்கப் போவதாகத் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன.

2014 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் பல மாற்றங்களை செய்து தற்போது நகர அபிவிருத்தி சபையின் கீழ் இயங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.

20 ஹெக்டயார் நிலத்தை நிரந்தரமாக பகிர்தளிப்பது தொடர்பிலும் , ஏனைய நிலங்களை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடுவது சம்hந்தமாகவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதனை மாற்றி அமைத்துஅனைத்து நிலத்தையும்; அரசுடமையாக்கியதுடன் ,99 வருடத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளளோம்.இந்தன் போது 446 ஹெக்டயார் நிலப்பரப்பு அரசுடைமையாக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

மூன்று வருடங்கள் முடியம் வரை அரசாங்கத்தால் எந்த தலையீடும் செய்ய முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை நாங்கள் நீக்கிவிட்டு தொடக்கத்திலிருந்தே அந்த நகரத்தை பொறுப்பேற்றுள்ளோம்.

இந்த திட்டத்தை செயற்படுத்தினால் கொழும்பு நகரம் மூழ்கடிக்கப்பட்டு விடும் என பலர் ஆருடம் தெரிவித்தனர். நகரம் எப்போது மூழ்கும் என பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இருக்கின்றார்கள்.

உமா ஓயா மற்றும் மாவலி திட்டத்தைப் போல் இதுவும் மூழ்கிவிடும் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. நாங்கள் அந்த திட்டம் தொடர்பில் நன்கு ஆராய்ந்தே செய்தோம். ஒப்பந்த தாரர்களுடன் ஒழுங்கான முறையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டே இந்த திட்டத்தை செயற்படுத்தினோம் அதனால் எமக்கு எந்த பிரச்சினையையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட வில்லை.

ராஜபக்ஷ அரசாங்கத்தினால் செயற்பாட்டு செலவுகள் அரசாங்கத்தினாலேயே பொறுப்பேற்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தனியார் நிறுவனங்கள் மற்றும் பல நிறுவனங்களுடன் இணைந்தே இந்த செலவுகளை ஏற்றுக்கொண்டோம்.

இங்கு கார் பந்தயத்தை நடத்துவதற்காக திட்டம் போடப்பட்டிருந்தது. அதனை நீக்கிவிட்டு அனைத்து மக்களும் சென்று பார்வையிட கூடிய பூங்காவை அமைப்பதற்காக திட்டமிட்டுள்ளோம்.

பொது போக்குவரத்து திட்டத்திற்காக இங்குருகொட சந்தியிலிருந்து அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் கொழும்பு சைத்திய வீதியுடன் இணைக்கப்படும் துறைமுக நகரத்திலிருந்து அமைக்கப்பட உள்ள அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும்.அந்த நகரத்திலிருந்து 15 அல்லது 20 நிமிடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைய முடியும்.

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கொள்ளுபிட்டிய வரைக்கும் சுரங்க பாதையொன்று அமைக்கப்படும்.இதன் மூலம் ஓரளவு போக்குவரத்து நெருக்கடியை குழைறக்க கூடியதாக இருக்கும். கட்டுநாயக்காவில் விமான நகரமொன்று அமைக்கப்படும்.இது 80 ஏக்கர் விஸ்சிரனம் கொண்டது.இத்திட்டத்தின் மூலம் உள்ளாச பயணிகளை கவரமுடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!