மேடைகளில் பேசும் விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இல்லை

சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் தாம் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இந்த மக்களின் பிரச்சினைகள் பற்றி எந்த தெளிவுபடுத்தல்களையும் முன்வைப்பதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் வேட்பாளர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தான்.

மக்களின் நலனுக்காக தாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை வேட்பாளர்கள் ஏற்றுக்கொண்டதாலேயே அவர்களுக்கு ஆதரவு தர முன்வந்ததாக பிரதிநிதிகள் கூறுகின்றனர். அதன்படி தாம் கைகாட்டும் வேட்பாளர்களுக்கே மக்களும் வாக்களிக்க வேண்டும் என பிரதிநிதிகள் அவர்களிடம் சென்று ஆதரவு கேட்டு வருகின்றனர். ஆனால் இங்கு பிரதிநிதிகள் மக்களிடம் கூறும் விடயங்களுக்கும் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத வகையிலேயே வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இருக்கின்றன.

இது குறித்து பிரதிநிதிகள் கண்டும் காணாதது போன்று வழமையாக மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். மறுபக்கம் தேர்தலுக்கு முன்பே தாம் ஏமாற்றப்பட்டிருப்பது குறித்து புரியாது மக்களும் பிரதிநிதிகளின் வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னே செல்கின்றனர். இது வழமையாக இடம்பெறும் சம்பவங்கள் தான் என்றாலும் பிரதான வேட்பாளர்கள் எந்தளவுக்கு சிறுபான்மை மக்களை முட்டாள்களாக எண்ணியுள்ளனர் என்பதற்கு ஒரு உதாரணமாகவும் உள்ளது.

சிறுபான்மை மக்களை மட்டுமன்றி தமிழ் பிரதிநிதிகளையும் அவர்களின் பலவீனங்களையும் அறிந்து வைத்துள்ள பெரும்பான்மை வேட்பாளர்கள் முதலில் தமது மக்கள் நலன் குறித்த விடயங்களை விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி விட்டே சிறுபான்மை மக்களைப்பற்றி சிந்திக்கின்றனர் என்பதற்கு தேர்தல் விஞ்ஞாபனங்களே சிறந்த உதாரணங்களாகியுள்ளன. மலையக பெருந்தோட்ட மக்களின் பிரதான பிரச்சினைகளை முன்வைத்து மலையக பிரதிநிதிகள் இரண்டு வேட்பாளர்களிடமும் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் வேட்பாளர்கள் இருவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் என்ன விடயங்களை உள்ளடக்கியுள்ளனர் என்பது குறித்தும் இங்கு பார்க்க வேண்டியுள்ளது.

கோத்தாபய ராஜபக்க்ஷவின் விஞ்ஞாபனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மலையக மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு உறுதியளித்துள்ளார் என்று கூறியே அவருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியிருந்தமை ஞாபகமிருக்கலாம். மட்டுமன்றி தாம் முன்வைத்த 32 அம்ச கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும் இ.தொ.கா கூறியிருந்தது.

வீடமைப்பு தொடர்பில் கருத்துத்தெரிவித்திருந்த இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தற்போது 7 பேர்ச் காணியுடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வீடமைப்புத்திட்டத்துக்கு மாற்றாக 24 பேர்ச் காணியுடன் சகல வசதிகளும் கொண்ட வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதேவேளை தனது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு முன்பதாகவே நாவலப்பிட்டி மற்றும் கொத்மலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் 25 ஆம் திகதி அவரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதை எவ்வாறு பெற்றுத் தரப்போகின்றோம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

அதே வேளை மலையக வீடமைப்புத் தொடர்பில் கோத்தாபய தனது விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கும் விடயம் பல விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளது. அதில் பயிர்ச்செய்கைக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 பேர்ச்சி காணி உரித்துடன் தனி வீட்டுத்திட்டம் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் இந்திய வீடமைப்புத்திட்டமும் அடங்குகிறது.

மேலதிகமாக பத்தாயிரம் வீடுகளை அமைத்துக்கொடுக்கவும் இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக அடுக்குமாடி வீட்டுத்திட்டம் எதற்கு என்பது தெரியவில்லை. அதை விட இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் 24 பேர்ச் வீட்டுத்திட்டம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் கதைத்து வருகிறார். மறுபக்கமோ கோத்தாபய தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடுக்குமாடி வீட்டுத்திட்டம் பற்றி கூறியுள்ளார். இதில் எது உண்மை எது பொய் என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். ஆனால் அது குறித்து ஆறுமுகன் தொண்டமான் எந்த கருத்துக்களும் கூறவில்லை. ஏனெனில் இது வரையில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரவில்லை.

மட்டுமன்றி இ.தொ.கா முன்வைத்துள்ள 32 அம்ச கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த வித தீர்வுகளும் மலையக மக்கள் சார்பில் இந்த விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவில்லையென்பது முக்கிய விடயம். இந்த விடயம் எத்தனை பெருந்தோட்டப் பகுதி வாழ் மக்களுக்குத் தெரியும் என்பது முக்கிய கேள்வி.

ஏனென்றால் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி இ.தொ.கா எவ்விடத்திலும் எந்த விடயங்களையும் கதைக்கவில்லை. ஏனென்றால் அதில் மலையக பெருந்தோட்ட மக்களைப்பற்றி பெரிதாக ஒன்றுமே கூறப்பட்டிருக்கவில்லை என்பதே காரணம்.

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம்

சஜித் பிரேமதாஸ கடந்த 31 ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தார். இதில் சிறப்புக்குரிய விடயம் ஒரே தடவையில் தமிழ் ,சிங்களம் ,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் மலையக சமூகம் பற்றிய பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தமை முக்கிய விடயம்.

குறிப்பாக மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி , ஏற்கனவே அமுலில் இருக்கும் 7 பேர்ச் காணியில் உறுதியுடன் வீடு மட்டுமல்லாது காணி வழங்கலில் காணப்படும் நிர்வாகத் தடைகளை நீக்குதல் போன்ற விடயங்களும் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளைப் பொறுத்தவரை பெருந்தோட்டப்பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும் என்றும் உயர்தர கல்வி வாய்ப்பை மேம்படுத்தும் மலையக பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று மலையக இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் தொழில் வலயங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களும் அமைக்கப்படும் என்றும் நாடெங்கினும் காணப்படும் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மலையக சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேச சுகாதார சேவைக்கு ஒப்பான தரமான சுகாதார சேவை தோட்டப்புறங்களுக்கும் பெற்றுத்தரப்படும் என்றும் “மலையக தமிழ் விவசாயி” களாக, நிலையான வருமானம் பெற்றுக்கொள்வதற்காக, தனியார்/அரச பெருந்தோட்டங்கள் மீள் கட்டமைப்பு செய்யப்படும் அதேவேளை இந்த மலையக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்கி, தோட்ட நிறுவனங்களும், இந்த மலையக விவசாயிகளும் பங்காளர்களாகும் வெளிவாரி தொழில் முறைமை உத்தரவாதம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேயிலை தொழிலும் ஒரு விவசாயப்பயிர் என்ற நோக்கில் அதில் ஈடுபட்டிருப்பவர்களை விவசாயிகள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதானது நாட்டில் தோட்டத்தொழிலாளிகள் என்ற பெயரில் தனியாக எவரையும் அடையாளப்படுத்த தேவையில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றதோ தெரியவில்லை.

இவை ஆரோக்கியமான முன்மொழிவுகளை காட்டினாலும் சம்பள விடயத்தில் வேட்பாளர் சஜித் ஆரம்பத்தில் கூறிய விடயம் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பது முக்கிய விடயம். அதாவது சமமான நியாயமான சம்பளம் என்ற விடயமே வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரசார மேடைகளில் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1500 ரூபா வழங்கப்படும் என்று சஜித் கூறியிருந்தமை முக்கிய விடயம்.

கோத்தாபய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியது போன்று சஜித் இவ்விடயத்தை குறிப்பிடவில்லை. எனினும் சஜித்துக்கு ஆதரவு தரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரோ நிலையான வருமானத்தைப் பெற்றுத்தரும் திட்டம் பற்றியே கூறுகின்றனர்.

ஜனாதிபதி செயலணி என்ற விடயத்தை கூட்டணியினர் 2015 ஆம் ஆண்டே ஏன் முன்வைத்திருக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் தெரியாது அவர்களுக்கு ஆதரவு தரும் மலையக பிரதிநிதிகள் மக்களுக்கு ஒரு வார்த்தையையும் மக்களுக்குத் தெரியாது வேட்பாளர்களிடம் வேறு கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனரா என்ற சந்தேகமே நிலவுகிறது.

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் அனைத்தையுமே பத்திரிகைகள் பிரசுரிப்பதில்லை. அதே போன்று தாம் ஆதரவு அளிக்கும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை முழுவதுமாக அறியும் உரிமை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் உள்ளது. அதை அவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு மேற்படி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் பிரதிநிதிகளுக்குமுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் தமிழில் வெளியாகவில்லை. அதே நேரம் தமிழிலும் வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு அதற்கு ஆதரவளிக்கும் தரப்புகள் முயற்சி எடுக்க வேண்டும்.

பிரதிநிதிகள் சொல்கிறார்கள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு மக்கள் செயலில் இறங்க வேண்டியதில்லை. மாறாக வேட்பாளர்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற ஆவணமாக தெரிவித்துள்ள விடயத்தையும் அறிந்து கொண்டு அதற்குப்பிறகு முடிவெடுக்கும் ஜனநாயக தன்மையை பிரதிநிதிகள் உறுதி செய்தல் அவசியம். ஏனெனில் தேர்தலுக்குப் பின்பு மக்கள் தைரியமாக கேள்வி கேட்கும் நிலையை ஏற்படுத்துவதற்கு இது ஒன்றே வழி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!