தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா? – கிருஷ்ணகிரி பெண்ணிடம் பிரதமர் மோடி பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ருத்ரம்மா என்ற பெண்ணிடம் தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா? என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார்.

இலவச சமையல் எரிவாயு பயனாளிகள் திட்டம் (உஜ்வாலா யோஜனா) கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரேத்யக ஆப் (செயலி) மூலமும், தூர்தர்சன் மூலமும் இன்று காலை 9.30 மணிக்கு நேரடியாக கலந் துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் இந்தியாவில் பல்வேறு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் இந்திய பெண்களின் சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி செல்கிறது. ஏழை, விளிம்பு நிலை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை இந்த திட்டம் பலப்படுத்தி உள்ளது.

2014-ம் ஆண்டு வரை 13 கோடி மக்கள்தான் எரிவாயுவை இணைத்து இருந்தனர். அதில் பெரும்பாலானோர் பணக்காரர்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி புதிய இணைப்புகள் ஏழைகளின் பயனுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ருத்ரம்மா என்ற பெண்ணுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

அப்போது அவரிடம் இலவச எரிவாயு இணைப்பு கிடைத்தது பற்றி கேட்டு அறிந்தார். பின்னர் சிரித்த வாரே தமிழகம் வந்தால் எனக்கு தோசை தயாரித்து தருவீர்களா? என்று மோடி கேட்டார்.

அதற்கு அந்த பெண் கட்டாயம் தோசை தயாரித்து தருகிறேன். எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அன்புடன் அழைப்பு விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!