சஜித்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ஜீ.எல்.பீரிஸ்

13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு என்று மிகத் தெளிவாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு திடீரென சஜித்தை ஆதரிக்க ஏகமனதாக தீர்மானித்துள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியிர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் 14 அரசியல் கட்சிகள் கூட்டணியமைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மிரிஹானையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிரதான கட்சியாகும். இவ்வாறிருக்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் போது ‘ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது ‘ என்று கூறினார்கள். அவ்வாறெனில் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் சஜித் பிரேமதாசவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.

காரணம் ஐந்து பிரதான கட்சிகளும் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அந்த கோளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு என்று மிகத் தெளிவாக கூறியிருந்தன. எனினும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ திட்ட வட்டமாக அறிவித்தார்.

சஜித் இது பற்றி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காத நிலையில் சம்பந்தனும், சுமந்திரனும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாக இருக்கிறது.

வடக்கில் இவ்வாறு கூறிவிட்டு தெற்கில் இதற்கு எதிர்மறையாக தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சஜித் ஜனாதிபதியானால் கடந்த ஒன்றரை வருடத்தை விடவும் மோசமானதொரு நிலைமையே ஏற்படும்.

நாட்டில் நல்லிணக்கம் , அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்துவோம் என்று கூறிக் கொண்டிருக்காமல் அவற்றை செயலில் காண்பித்த கோத்தாபயவை மக்கள் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!