மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை வெளியிட்டது ஏன்?- தினகரன் கேள்வி

மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் தற்போது வெளியிட என்ன காரணம்? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடாததால் கொதித்து போய் உள்ளனர். கலெக்டரிடம் மனுக்களை தரச்சென்ற எங்களை போலீசார் சுட்டு கொன்று உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் பழைய நிலைக்கு திரும்புவோம். இல்லை என்றால் எங்களை சுட்டு கொன்றுவிடுங்கள் என்று கூறுகின்றனர்.

ஆலையை மூடுவதற்கான உத்தரவாதத்தை அரசு தரவேண்டும். தூத்துக்குடி கலெக்டர் சரியாக கையாளாததால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக நினைக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு யார் உத்தரவிட்டது?.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விரைவில் அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது.

ஜெயலலிதா மருத்துவமனையில் பேசிய ஆடியோவை தற்போது விசாரணை ஆணையம் வெளியிட காரணம் என்ன?. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைக்கவே இவ்வாறு அரசு செயல்பட்டு உள்ளது. இதுபற்றி நீதிபதி ஆறுமுகசாமியிடம்தான் கேட்கவேண்டும்.

இந்த அரசு மீது தூத்துக்குடி மக்கள் கோபமாக உள்ளனர். இது தெரியாமல் முதல்-அமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் விஷப்பரீட்சையில் இறங்க பார்க்கிறார்கள். போலீசாருடன் செல்வது விபரீத விளைவுகள் ஏற்படும். ஆலையை மூடிவிட்டு மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!