எரிவாயு தட்டுப்பாட்டினால் திணறும் இலங்கை – 4000 உணவகங்கள் மூடப்பட்டன!

இலங்கையில், எரிவாயு பற்றாக்குறையினால், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 4000 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த எரிவாயு பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது கிடைக்கப்பெற்ற ஆலோசனைகளுக்கு அமைய, சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் நேற்று சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. எனினும் தொடர்ந்தும் பல பகுதிகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் இரண்டு எரிபொருள் களஞ்சியங்களின்மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான குண்டுத் தாக்குதலின் காரணமாக எரிவாயுவை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், கடந்த சில தினங்களில் சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில், எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!