வடக்கு – கிழக்கு மக்கள் போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகின்றனர் : சுசில் பிரேமஜயந்த

போலி வாக்குறுதிகளை வழங்கி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பால் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் தமிழ் , ஆங்கில மொழிபெயர்ப்புக்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக விக்கிணேஷ்வரன் தெரிவித்திருப்பதன் மூலம் இது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டார்.

இராஜகிரியவில் உள்ள சுதந்திர கட்சியின் – பொதுஜன பெரமுன இணைந்த அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் சுமார் 659 இலட்சம் வாக்குகளில் 7 இலட்சத்து 59 ஆயிரம் தபால் மூலம் வாக்காளர்களாவர். அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆர்ம்பமான பின்னரே புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

எனவே அவர்களுக்கு விஞ்ஞாபனத்தை பார்த்து அதற்கேற்ப வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கான தேவையும் அரச ஊழியர்களுக்கு இல்லை. காரணம் இது வரையில் வாக்களித்துள்ள அரச ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே வாக்களித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் சிங்கள மொழி பிரதிக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல பிரதிகளுக்கும் முரண்பாடுகள் காணப்படுவதாக முன்னாள் வடமாகண முதலமைச்சர் விக்கினேஷ்வரன் தெரிவித்திருக்கிறார். அத்தோடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஷ் பிரேமசந்திர ஆகியோரும் சஜித்துக்கான ஆதரவை தெரிக்கவில்லை.

மேலும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும் அதில் ஒற்றையாட்சி என்ற சொல் எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

இதிலிருந்து சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக போலியான பிரசாரங்களை முன்னெடுக்கின்றார் என்பது தெளிவாகிறது.

புதிய அரசியலமைப்பு பற்றி பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்பட்டது. எனினும் அது பற்றி ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை.

அன்று வெளிப்படுத்தப்படாத புதிய அரசியலமைப்பு பற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடே இன்று சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் தொடர்ச்சியாக பொய் வாக்குறுதிகளை வழங்கி வடக்கு , கிழக்கிலுள்ள தமிழ் மக்களை ஏமாற்றும் உரிமை கூட்டமைப்புக்கு இல்லை. அவ்வாறு அவர்களை ஏமாற்றவும் முடியாது.

சஜித்தின் விஞ்ஞாபன மொழி பெயர்ப்புக்களில் சிக்கல் இருப்பதாக விக்கினேஷ்வரன் தெரிவித்திருப்பதிலிருந்தே தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பது தெளிவாகின்றது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!