பெரும்பாலான மக்களின் ஆதரவினை பெற்று கோத்தாபய நிச்சயம் ஜனாதிபதியாவார் – கெஹலிய ரம்புக்வெல

ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கும், எதிர்த்தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு மாத்திரமே தேர்தலில் கடுமையான போட்டியுள்ளது. பெரும்பாலான மக்களின் ஆதரவினை பெற்று கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கலகெரத நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனுவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி யாரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தற்போது தீர்மானித்து விட்டார்கள். கடந்த நான்கரை வருடகாலமாக ஐக்கியதேசியகட்சியின் முறையற்ற நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சிறந்த அரசியல் தீர்வை ஏற்படுத்துவார்கள்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35பேர் போட்டியிடவுள்ளார்கள். தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும், புதிய ஜனநாயக முன்னணின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இடையிலே போட்டித்தன்மை காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் போது 30வருட கால யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று மாத்திரமே நாட்டு மக்கள் குறிப்பிட்டார்கள். மக்களின் கோரிக்கைகளுக்கு அமையப் பயங்கரவாத சிவில் யுத்தம் குறுகிய காலத்திற்குள் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

மீண்டும் ஆட்சியதிகாரத்திகை கைப்பற்றி விடுவார் என்ற அச்சத்தில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் தற்போது எதிர்க் கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ களமிறக்கியுள்ளார். நிச்சயம் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று ரீதியில் பாரிய பின்னடைவினை எதிர்கொள்ளும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!