விதிமுறைகளை மீறினால் தேர்தலில் போட்டியிடவே முடியாது!

தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேட்பாளர்கள் சட்டத்தை மீறிச் செயற்பட்டால் அவர்கள் கட்டுப் பணத்தை இழப்பதோடு எதிர்காலத்தில் தேர்தலொன்றில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் கூறியுள்ளார்.

தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த எச்சரிக்கையை ஆணைக்குழுத் தலைவர் விடுத்தார்.

தேர்தல் விதிகளின் பிரகாரம் எந்தவொரு வேட்பாளரும் மற்றொரு வேட்பாளருக்காக ஆதரவு தேடவோ, மேடைகளில் ஏறவோ முடியாது. இத் தேர்தல் விதியை பலரும் மீறி வருகின்றனர். அதுமட்டுமன்றி சில வேட்பாளர்கள் தமது பணிகளுக்காக இந்த வேட்பாளர்களைப் பயன்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனைச் செய்யும்போது தேர்தல் விதிகள் மீறப்படாத வகையில் செய்துகொள்ள வேண்டும். மொத்த வேட்பாளர்களில் மூன்று, நான்கு பேரைத் தவிர ஏனைய சகலரும் டம்மி வேட்பாளர்களாகவே காணமுடிகிறது.

தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறாத வகையில் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேர்தல் வரலாற்றில் மிகக் கூடுதலான வேட்பாளர்களைக் கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இத் தேர்தல் அமையப்பெற்றிருப்பதால் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே பாதுகாப்புத் தரப்புடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் கூட்டமாக கூடி நிற்பதையும், தாக்குதல்களில் ஈடுபட்டு குழப்ப நிலையை ஏற்படுத்துவதையும் முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!