யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தினரின் செயற்பாடு தேவையில்லை

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தினரின் செயற்பாடு தேவையில்லை சிவில் நிர்வாகமே தேவை யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சிறப்பு அமர்வு நேற்று சபை மண்டபத்தில் முதல்வர் இ.ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் இந்த தீர்மானத்தை சபையில் முன்மொழிந்தார். சர்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 ஆம் திகதி வடமாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுடன் யாழ்.மாநகரசபை வடக்கு மாகாண சபை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் பங்களிப்புடன் யாழ்.பண்ணை கடற்கரைப் பூங்காப்பகுதியில் மரநடுகை நிகழ்வு இடம்பெறவுள்ளமை தொடர்பாக உரையாற்றும் போதே மணிவண்ணன் இதனை முன்வைத்தார்.

குறிப்பாக வடக்கில் தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியுள்ள இலங்கை இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற வேண்டும் என நாம் குரல் கொடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் இங்கு நிகழும் நிகழ்வுகளுக்கு இராணுவத்தினைரை நாம் பயன்படுத்துவதன் ஊடக அவர்களை இங்கிருக்க நாம் அனுமதிப்பது போலாகிவிடும். எனவே இராணுவத்தினரை பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார்.

மற்றும் ஒரு உறுப்பினர் மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் மர நடுகை நிகழ்வுக்கு இராணுவத்தினரை பயன்படுத்தக் கூடாது என்பதுடன் வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுக்கு நாம் கண்டனம் தெரிவிக்கின்றோம் என்றார். இதனையடுத்து மாநகரசபை எல்லைக்குள் இராணுவத்தினரை எத்தகைய செயற்பாட்டுக்கும் இடமளிக்கக்கூடாது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!