கழிவறையில் அடைத்து பெண் ஆசிரியரை சித்ரவதை… ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிந்து வரும் மம்தா துபே என்கிற ஆசிரியை அங்கு பயின்று வரும் மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

அவர் தாக்குதலுக்குள்ளாகும் வீடியோ காட்சியினை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தனது நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, அங்கு வந்த ஒரு மாணவர் அவருடைய கைப்பையை தூக்கி எறிகிறார்.அதனை எடுத்து வந்த பின்னர், ஆசிரியைக்கும், மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், திடீரென நாற்காலியை எடுத்து ஆசிரியை மீது தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறான். உடனே அந்த ஆசிரியையும் அங்கிருந்து வெளியேறுவதை போல வீடியோ அமைந்துள்ளது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ள ஆசிரியை சம்பவம் குறித்து பேசுகையில், “நான் காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிகிறேன். ஆசிரமத்தின் நிர்வாகம் இப்போது சிறிது காலமாக என்னைத் தொந்தரவு செய்து வருகிறது”.”இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் கழிவறையின் உள்ளே இருந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனை மாணவர்கள் தான் செய்தார்கள். இது குறித்து நான் அதிகாரிகளிடம் பேசியபோது, குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் அங்கு சென்றபோது, மாணவர்களால் தாக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதேபோல பலமுறை தாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆசிரம நிர்வாகம், ஆசிரியை அடிக்கடி அநாதை என மாணவர்களை திட்டியதால் அவர்கள் கோபமடைந்து அப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!