பெற்ற பிள்ளைகளை மலை மேலிருந்து வீசிக் கொலை செய்த தந்தை!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருசூக உள்ள அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணவன் – மனைவி சிரஞ்சீவி, பாக்கியத்திற்கு கிரிதாஸ் என்ற 8 வயது மகனும், கவிதர்ஷினி என்ற 5 வயது மகளும் இருந்தனர். சிரஞ்சீவி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதும், மனைவி கோபித்துக் கொண்டு கவரப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிடுவதும் வாடிக்கை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் 2 பிள்ளைகளையும் உறவினர் வீடுகளில் விட்டுவிட்டு மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதையும் சிரஞ்சீவி வாடிக்கையாக வைத்துள்ளார். பிள்ளைகளை மறைத்து வைத்திருப்பதாகவும், மனைவி வந்தால் மட்டுமே மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதாக எமோசனல் பிளாக்மெயில் செய்வதை சிரஞ்சீவி வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரஞ்சீவிக்கும் அவரது மனைவி பாக்கியத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் சண்டை, சமாதானத்தை தொடர்ந்து வீடு திரும்பிய பிறகு, தனது பிள்ளைகளின் புகைப்படத்தை வைத்து சிரஞ்சீவி வீட்டில் அழுவதை கண்டு மனைவி சந்தேகமடைந்துள்ளார். பிள்ளைகளை எங்கு மறைத்து வைத்திருக்கிறாய் என கேட்டபோது கணவன் பதில் சொல்லாத நிலையில் உறவினர் வீடுகளுக்கு சென்று விசாரித்துள்ளார். அங்கும் பிள்ளைகள் இல்லாததால், மனைவி பாக்கியம் கொல்லிமலை வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிரஞ்சீவியிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறிய தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கடந்த 11ஆம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு செம்மேடு சீக்குபாறை பகுதிக்கு சென்றதாகவும், அங்குள்ள வியூ பாயிண்ட் மீது ஏறி சுமார் 250 அடி பள்ளத்தில் இரு பிள்ளைகளையும் தூக்கி வீசி விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் சிரஞ்சீவி கூறியுள்ளார். மனைவியின் மீது ஏற்பட்ட ஆத்திரம் கண்ணை மறைத்துவிட்டதால் இவ்வாறு செய்துவிட்டதாக சிரஞ்சீவி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பவ பகுதியில் இருந்து இரண்டு சிறார்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு குழந்தைகளை மலை மீதிருந்து வீசிக் கொன்ற தந்தை சிரஞ்சீவியை கைது செய்தனர். குடிப் பழக்கம், அதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி மலைமீதிருந்து வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் கொல்லிமலை கிராமங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!