“மலேசிய விமானம் எங்கே? தேடுதலை நிறுத்த வேண்டாம்”

2014 இல் காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் என விமானப்பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலேசியாவின் எம்.எச் 370 விமானத்தை தேடும் பணிகள் இன்றுடன் உத்தியோகபூர்வமாக முடிவடையும் நிலையிலேயே விமானத்துடன் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மலேசியாவின் புதிய போக்குவரத்து துறை அமைச்சரும் விமானத்தை தேடும் பணிகளை இடைநிறுத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானத்தின் சிதைவுகளை கடலிற்கு அடியில் தேடும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விமானத்தை தேடும் பணி குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிற்கு மாறாக அரசாங்கம் செயற்படுகின்றது என குற்றம்சாட்டியுள்ள கிரேஸ் நாதன் என்பவர் விமானத்தை தேடும் பணிகள் ஏன் கைவிடப்படுகின்றன என்பதற்கான தெளிவான காரணங்களை மலேசிய அரசாங்கம் முன்வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது தாயும் காணாமல்போன விமானத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விமானத்தில் தனது மனைவியை பறிகொடுத்த கே.எஸ் நரேந்திரன் என்பவர் யாரோ களைத்துப்போனார்கள் என்பதற்காக தேடுவதை நிறுத்துவது தீர்வாகாது என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!