மாடியிலிருந்து கீழே விழவிருந்த குழந்தையை காப்பாற்றிய அகதிக்கு நிரந்தர குடியுரிமை வழங்கிய பிரான்ஸ்!

மாடி பால்கனியில் இருந்து கீழே விழவிருந்த குழந்தையை காப்பாற்றிய மாலி அகதிக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார். மாலி நாட்டை சேர்ந்த மமூது கசாமா(22), வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார்.

பாரீசின் வடக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கண்ட அவர் என்னவென்று பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, கட்டிடத்தின் 4வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்துள்ளது. அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார்.

குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால் சற்றும் யோசிக்காத கசாமா, கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி ஏறி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இந்த வீடியோ சமூவலைதளங்களில் வைரலாக தொடங்கியதும் கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து, மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில், கசாமாவின் வீரதீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!