ஐ.ஐ.டி மாணவி தற்கொலை விவகாரம்: 11 மாணவ-மாணவிகள் திடீர் உண்ணாவிரதம்!

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த கேரள மாணவி பாத்திமா கடந்த 8-ந் தேதி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள். தன்னுடைய சாவுக்கு சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்பட பேராசிரியர்கள் தான் காரணம் என்று மாணவி பாத்திமா செல்போனில் பதிவிட்ட தகவல் அடிப்படையில், அந்த 3 பேரிடம் கோட்டூர்புரம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள். மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் குறிப்பிட்ட 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டார்கள்.

ரகசிய இடத்தில் விசாரணை
இந்த நிலையில் அந்த 3 பேராசிரியர்களை நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி விசாரணைக்கு ஆஜரான அவர்களை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது பல புதிய தகவல்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

திடீர் உண்ணாவிரதம்
மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவ அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஐ.ஐ.டி.யில் படிக்கும் 2 கேரள மாணவிகள் உள்பட 11 மாணவ- மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஐ.ஐ.டி.யில் இனி எந்த ஒரு மரணமும் நிகழக்கூடாது. பாத்திமா தற்கொலை விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு அவர்களிடம் ஐ.ஐ.டி. நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!