கொல்கத்தா சாலையில் பண மழை!

கொல்கத்தாவில் பென்டின்க் சாலையில் வணிக நிறுவனங்கள் அடங்கிய கட்டிடம் ஒன்று உள்ளது. மெ.கே.பாயின்ட் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் பல மாடிகளை கொண்டது. இந்த கட்டிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது. இந்த நிலையில் வருமான வரித்துறையின் புலனாய்வு அமைப்பினர் வணிக நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அந்த கட்டிடத்தில் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனை அந்த கட்டிடத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சோதனைக்கு பயந்து 6-வது மாடியில் இருந்து ஊழியர் ஒருவர் பண கட்டுகளை வீசினார். மொத்தம் 3 பண்டல் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதாக தெரிகிறது. ரூ.2000, ரூ.500 நோட்டுகள் காற்றில் பறந்து கீழே விழுந்தன. சில நோட்டுகள் அருகே உள்ள மரத்திலும் தொங்கி கிடந்தன.

கொல்கத்தா சாலையில் ரூபாய் நோட்டுகள் மாடியில் இருந்து பறந்து வந்தன. ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருகே இருந்தவர்களும், அந்த கட்டிடத்தின் காவலாளிகளும் அதை எடுத்துச்சென்றனர். ரூ.2000, ரூ.500 தாள்களை கொண்ட மொத்தம் ரூ.3.74 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் மாடியில் இருந்து வீசப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தா சாலையில் பணம் மழை பொழிந்ததை அருகே இருந்த கடைக்காரர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ உடனடியாக வைரலாக பரவியது. இந்த சோதனை தொடர்பாக வருவாய் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறும்போது, “அந்த கட்டிடத்தில் உள்ள சில அலுவலகங்களில் நாங்கள் சோதனை நடத்தினோம். இந்த சோதனைக்கும், பணம் வீசப்பட்டதற்கும் வெளிப்படையான தொடர்பு எதுவும் இல்லை” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!