அமைவிட முக்கியத்துவமும், வளங்களும் இருந்தும் எமது நாடு ஏன் முன்னேற்றமடையவில்லை? – சபாநாயகர்

எமது நாடு சுதந்திரமடைந்த போது இலங்கைக்குச் சமனாக இருந்த ஜப்பான் தற்போது பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால் பூகோள அமைவிட முக்கியத்துடன் பெருமளவான வளங்களையும் கொண்டிருக்கும் எமது நாடு வேகமான அபிவிருத்தியை ஏன் அடையமுடியவில்லை என்பதை நாமே சுயபரிசீலனை செய்து பார்க்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கை துறைசார் சங்கங்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி நாத் அமரகோனின் 2 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று மாலை கொழும்பிலுள்ள துறைசார் சங்கங்கள் அமைப்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நீதியானதும், நியாத்துவமானதுமான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே கலாநிதி நாத் அமரகோனின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அத்தகையதொரு நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. நாத் அமரகோன் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் நாடு குறித்தே பேசுவார். அவரால் ஸ்தாபிக்கப்பட்ட துறைசார் சங்கங்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் துறைசார் நிபுணர்களின் நாட்டிற்கான அறிவார்த்தமான பங்களிப்பை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்ததாக எமது நாடு சிறப்பானதொரு பூகோள அமைவிடத்தையும், பெருமளவான வளங்களையும் கொண்டிருக்கின்றது.

அதன் காரணமாகவே சர்வதேச நாடுகள் பலவும் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணவிரும்புகின்றன. 1948 ஆம் ஆண்டில் நாம் சுதந்திரமடைந்த போது ஜப்பானும், எமது நாடும் ஒரே மட்டத்திலேயே இருந்தன. ஆனால் தற்போது ஜப்பான் அபிவிருத்தியடைந்து வெகுவாக முன்னேறியுள்ள போதிலும், நாம் அத்தகைய முன்னேற்றத்தை அடையவில்லை.

எனவே எமக்கு என்ன நேர்ந்தது என்பதை நாமே சுயபரிசீலனை செய்து பார்க்கவேண்டும். அதனூடாக நாட்டை பொருளாதார, வர்த்தக மத்திய நிலையமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!