அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினார் புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வந்த சிறிலங்கா காவல்துறை தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளரான நிசாந்த சில்வா, நேற்று பிற்பகல் 12.50 மணியளவில் தமது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் நோக்கிப் பயணமானார்.

இவர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து சிறிலங்கா காவல்துறை திணைக்களத்துக்கு அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சி மாற்றத்தை அடுத்து ஏற்பட்ட அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள அவர் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க படுகொலை, கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரித்து வந்தவர் நிசாந்த சில்வா.

இவரே, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்தும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அடைக்கலம் கொடுத்திருந்தமை குறித்த வழக்கையும் புலனாய்வு செய்திருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட 60இற்கு மேற்பட்ட குற்றச்செயல்கள் குறித்த புலனாய்வுகளையும் மேற்கொண்டிருந்த தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா, புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கையும் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருந்தார்.

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சானி அபேசேகர, சில நாட்களுக்கு முன்னதாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, நிசாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நிசாந்த சில்வா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருந்தார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்ற விசாரணைத் திணைக்களத்தின் முக்கியமான புலனாய்வு அதிகாரியான நிசாந்த சில்வா, 2018 ஒக்ரோபர் 26ஆம் நாள் தொடக்கம் 52 நாட்கள் நீடித்த மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது நீர்கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியின்றி பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவு மீளப் பெறப்பட்டு குற்ற விசாரணைத் திணைக்களத்தில் பணியாற்றினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!