704 சிஐடி அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறத் தடை

அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ள 704 குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளின் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்ற விசாரணைத் திணைக்களத்தின், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வா, நேற்று முன்தினம் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர,

”குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் ஏராளமான வழக்குகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற நடைமுறைகளின்படி இவர்களின் சாட்சியங்கள் தேவைப்படுவதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெயர்பட்டியலில் உள்ள யாரேனும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு வந்தால் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு அறிவிக்குமாறு விமான நிலைய அதிகாரிகள் கோரப்பட்டுள்ளனர்.

அவர்கள் முன் அனுமதி பெற்றிருந்தால் சரி. இல்லையெனில், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் .இருப்பினும், இது அவர்களுக்கான பயண தடை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வா, முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!