கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் – சரத் பொன்சேகா

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலாக நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சியின் நகர்வுகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதான இரண்டு கட்சிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கூட்டாட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை. அதனை எம்மால் முழுமையாக மறுக்க முடியாது.

எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் பல நல்ல காரியங்களையும் இதற்கு முன்னர் ஆட்சிகளில் முன்னெடுக்கப்படாத வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.

யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள், நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என முக்கியமான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். ஆகவே வேலைத்திட்டங்கள் எதனையும் செய்யவில்லை என கூறிவிட முடியாது.

ஆனால் இன்று தேசிய அரசாங்கம் என்ற கொள்கையை மறந்து மீண்டும் கட்சி சார்ந்த தனிப்பட்ட அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் எதிர்கால வேலைத்திட்டங்கள் தடைப்படுகின்றன. இந்த அரசாங்கத்தில் உள்ள பாரிய பிரச்சினை இதுவேயாகும்.

ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றவர். அவரது வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகும்.

மாறாக ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஏனைய கட்சிகளினதும் ஆதரவிலேயே அவர் ஜனாதிபதியானார். அவ்வாறு இருக்கையில் இன்று அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நலன்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படுவது ஒருபோதும் ஏற்றுகொள்ளப்பட முடியாத விடயமாகும்.

அதேபோன்று அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்ட நபர்களுக்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை வழங்கி அவர்களுக்காக இன்று ஆட்சியை குழப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இனியாவது ஜனாதிபதி சரியான தெரிவுகளை முன்னெடுக்க வேண்டும்.

முதுகெலும்புள்ள தலைவர்கள் உருவாக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். ஆட்சியை சரியாக முன்னெடுத்து செல்லக்கூடிய, தீர்மானங்களை சரியாக முன்னெடுக்கக்கூடிய முதுகெலும்புள்ள தலைவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

ஆனால் யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி 15 ஆண்டுகளாக ஒழிந்து மறைந்து யுத்தத்தின் பின்னர் தாம் தான் வீரர்கள் எனக் கூறிக்கொண்டுள்ள தலைவர்கள் இந்த நாட்டினை ஆளுவது பொருத்தமற்றதாகும்.

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்தத் தகுதியும் இல்லை. அவருக்கு ஆட்சி நிருவாகத்தை செய்யத் தெரியாது.

இராணுவத்தையே ஒழுங்காக வழிநடத்த தெரியாத, தைரியம் இல்லாத நபர் நாட்டினை ஆட்சிசெய்யும் ஆசையில் உள்ளார். ஆனால் அது நடைபெறாது. அதேபோல் இன்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அதிகமாக பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷ அதற்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார் என்றே தெரிகின்றது.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் இப்போதே தமது அடுத்த தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும். மீண்டும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடியாது.

தனி ஆட்சியையே அமைக்க வேண்டும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி அதற்கான தயார்ப்படுத்தலை முன்னெடுக்க வேண்டும். இதில் என்னை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுத்தால் நான் களமிறங்கவும் தயார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!