துண்டான சிறுவனின் கையை இணைத்து அரசு மருத்துவர்கள் சாதனை!

சேலத்தில் 11 வயது சிறுவனின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சேலம் 5 ரோடு அருகே கந்தம்பட்டி புறவழிச்சாலையில் வசித்து வரும் கூலித் தொழிலாளி ராமன் என்பவரது மகன் 11 வயதான மௌலீஸ்வரன். கடந்த 8ஆம் தேதி காலை வீட்டருகே சிறுவன் மௌலீஸ்வரன் விளையாடிக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் பஞ்சர் போடும் கடையில் இருந்த காற்றுப் பிடிக்கும் இயந்திரம் அழுத்தம் தாங்காமல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பறந்து வந்த இரும்புத் துண்டு ஒன்று மௌலீஸ்வரனின் வலது கையை மணிக்கட்டு வரை துண்டாக்கியுள்ளது. அலறித்துடித்த மகனை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். துண்டான அவனது கையின் பகுதியை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு, ஐஸ் கட்டியைச் சுற்றி வைத்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரை மணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்ததால் கையை இணைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி 11 மணி நேரம் போராடி, வெற்றிகரமாக துண்டான பகுதியை கையுடன் இணைத்து மருத்துவர்கள் குழு சாதனை புரிந்திருக்கிறது. இதுபோன்ற விபத்துகள் நேரும்போது, உடலில் துண்டாகும் பகுதியினை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு, ஐஸ் கட்டியைச் சுற்றி வைத்து 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு எடுத்து வந்துவிட்டால் மீண்டும் அதனை இணைப்பது பெருமளவு சாத்தியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது மௌலீஸ்வரன் மெல்ல மெல்ல குணமாகி வருகிறான் என்றும், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவன் வீட்டுக்கு செல்லலாம் என்றும் அதன்பிறகு அவனது கை வழக்கம்போல செயல்படும் என்றும் மருத்துவர்கள் கூறினர். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டிருந்தால் 5 லட்ச ரூபாய் வரை செலவாகி இருக்கும் என்று கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!