பாராளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்தும் 19க்கு முழு ஆதரவு : வாசுதேவ

அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நீக்குவதை காட்டிலும் தேவையான பொது விடயங்களை மேலதிகமாக இணைத்துக் கொள்வதே பொறுத்தமானதாக அமையும்.

பாராளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்தும் இத்திருத்தச்சட்டத்திற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கொள்கை பிரகாரம் முழு ஆதரவினையும் வழங்குவேன் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கம் அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஒரு தரப்பினரால் குறிப்பிட்டுக் கொள்ளப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமாயின் இத்திருத்தத்தினை இரத்து செய்வதாக அரசாங்க தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் கவனத்திற்குரியது.

அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் அரச நிர்வாக செயலொழுங்கு மற்றும் அதிகார பிரயோகம் உள்ளிட்ட விடயங்களில் சிக்கல் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி – பிரதமர் ஆகிய இருவருக்கும் இடையில் அதிகார பிரயோகம் தொடர்பான முறுகல் நிலை தொடர்ந்து ஏற்பட்டது.

இருப்பினும் இத்திருத்தம் பல வரவேற்கத்தக்க விடயங்களையும் கொண்டுள்ளது என்பதை அரசியல் கருத்துக்களுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தினை அதிகார ரீதியில் பலப்படுத்துவதாக அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் பல ஏற்பாடுகள் காணப்படுகின்றது.

பாராளுமன்றத்தின் செயற்பாட்டு ரீதியான அதிகாரங்களை பலப்படுத்தி பாராளுமன்றத்தினை பலமிக்கதாக்க வேண்டும் என்பது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பிரதான கொள்கையாக காணப்படுகின்றமையினால் கட்சியின் கொள்கையின் பிரகாரம் இவ்விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.

அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நீக்குவதை காட்டிலும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் குறித்து ஒரு தீர்வினை முன்வைத்து, தேவையான பொது விடயங்களை மேலதிகமாக இணைத்துக் கொள்வதே தற்போதைய சூழ்நிலைக்கு பொறுத்தமானதாக அமையும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!