பண்டிகை காலம் என்பதால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் : பாதுகாப்பு செயலாளர்

பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன , மக்களின் பாதுகாப்பை தடையின்றி உறுதிப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் தயாராகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பரிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள பொலிஸ் காலாட்படை தலைமையகத்தில் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கேள்வி : ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறீர்கள் ?

பதில் : தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த தகவல்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பாதுகாப்பு தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை என்று உறுதியளிக்கின்றோம்.

இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் சிறப்பாக தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். டிசம்பர் மாதம் ஆரம்பித்துள்ளது.

இம் மாதத்தில் பெரும்பாலான மக்கள் பல உற்சவங்கள் பண்டிகைகளில் கலந்து கொள்வார்கள். அத்தோடு விடுமுறை காலம் என்பதால் பாடசாலை மாணவர்கள் சுற்றுலா செல்வார்கள். இவை மாத்திரமின்றி புலம் பெயர் இலங்கையர்கள் உள்நாட்டுக்கு வருகை தருவார்கள்.

இவ் அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எமது பொறுப்பாகும். அந்த பொறுப்பை தடையின்றி நிறைவேற்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டவாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!