அமெரிக்க தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு

சிறிலங்காவில் நிரந்தர அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன்,

‘அதிபர் தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் தமிழ் அரசியல் கட்சிகளால், முன்வைக்கப்பட்டிருந்த போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே, சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன

தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பு ஒன்றின் மூலமாக அடைவதே எமது நோக்கம்.

தற்போதைய பிரதமரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம்.

மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம்.

எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம்.

இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே உறுதித்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ருவது மிக கடினமாகும்.

ஜனநாயக பண்புகளுக்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களுக்கும் நாம் ஆதரவளிக்கப் போவதில்லை. சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு ஆதரவாக செயற்பட முடியாது.

சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் அனைத்துலக மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணம்.

சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது, இந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவமுது, சிறிலங்கா அரசாங்கம், உள்நாட்டிலும் அனைத்துலக சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக் காட்டும்.

அதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவது சிறிலங்காஅரசாங்கம் அனைத்துலக பிரகடனங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதை மீளுறுதி செய்து கொண்டதுடன், சிறிலங்காவில் நிரந்தர அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!