அரசியல் சூழ்ச்சிகளே இலங்கை இன்னும் அபிவிருத்தியடையாமைக்கு காரணம்: அமைச்சர் துமிந்த

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் சூழ்ச்சியால் அரசை எவ்வாறு வீழ்த்துவது என்று எண்ணுவதாலேயே இலங்கை இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையாமல் இருக்கிறது என தெரிவித்த இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நாட்டை அபிவிருத்தி பாதையில் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நேற்று அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் சூழ்ச்சியால் ஆளுந்தரப்பை வீழ்த்த வேண்டும் என்று எண்ணுவதாலேயே இலங்கை இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. எனவே தோல்வியடைந்தவர்கள் ஆளுந்தரப்பை எவ்வாறு வீழ்த்துவது என்று சிந்திக்கமால் நாட்டை முன்னேற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

அதே போன்று தனியார், அரச ஊடகங்களானாலும், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் தினமும் மக்களுக்கு குறைகளை மாத்திரமே காண்பித்துக் கொண்டிருக்காமல் அபிவிருத்திகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். எனவே நாட்டை அபிவிருத்தியடைச் செய்வதற்கு ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணி பற்றி ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. இரு தரப்பும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அத்தோடு இரு கட்சி விடயங்கள் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே இவ்வாறு ஒருசிலரால் கூறப்படுகின்ற கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படத் தேவையில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தது. மாறாக அமைச்சரவை அமைச்சுக்கள் கிடைக்கப்பெறும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் ஒரு காரணியாக காணப்படுகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தி நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!