பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை!

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் 27ம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்தது.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியில் நடத்தினர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.

தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!